Monday, December 26, 2011

கல்லா … மண்ணா

என்னவோ துரத்துகிறது
எப்படியோ தப்பிக்கிறேன்


போயிராத கோயிலிருந்து
பிரசாதம் வருகிறது – கடவுள்
கொடுக்க சொன்னதாக ..


ஒடி ஒடி வருகிறேன்
ரயில் கிளம்பிவிட்டது !
பகீர் என்றானது – வாழ்க்கை
முடிந்து விட்டது போல் ..


தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன்
சிறுவயதில் உடன் படித்த தோழி.
சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக


வீடு வாங்கியதை தேவையற்று
சொல்லி கொண்டிருக்கிறேன் – அவள்
முகம் கோரமாக மாற தொடங்குகிறது


இறந்தவர்கள் நடக்கிறார்கள்
இயல்பாக பேசுகிறார்கள்


யாருடைய குழந்தையோ
பூங்கொத்து கொடுக்கிறது


என்னன்னவோ நடக்கிறது
முன்னுக்கு பின் முரணாக


விழித்து கொள்கிறேன்
கனவு கலைகிறது


நிகழ்வுகள் நிகழ்கின்றன
என்னன்னவோ நடக்கிறது – தொடர்கின்றன
புரிதலுக்கு பிடிபடாமலேயே …
இறந்தவர்கள் தென்படுவதில்லை
என்பதை தவிர ..

http://puthu.thinnai.com/?p=7306

தலைமை தகிக்கும்…

சூரியனை சூழ்ந்த கோளங்கள்
சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு
தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு..

தலைமை பதவியின் தனிமையால்
கலகலப்பாய் பழக ஆளில்லாமல்
தனித்த தலைமை தகிக்க
சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய்

பூமியை நேருக்கு நேர்
நிறுத்தி கேள்வி கேட்டால்,
நிலா வருந்தி, கறுத்து விடுகிறாள்
கிரகண நோய் தாக்கி. !

பூமியை பின்னுக்கு தள்ளி
நிலாவை நேரே சந்தித்து
காதலை சொல்ல நினைக்கையில் – சூரியனுக்கே
கிரகணம் பிடித்து விடுகிறது..

மற்ற பால் வெளியில்
தன்னை போன்று திரியும்
சூரியன்களிடம் கேட்டு பாரக்கலாம்.
தகிக்காத தலைமை வசப்படுமா என ?

http://puthu.thinnai.com/?p=6169

அகாலம் கேட்கிற கேள்வி

ஆழ்வேர் நேச காதலினாலோ
பாசி படர், மாசு தொடர்பினாலோ
பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும்,
விநாடியில் மறைக்கிற அகால மரணமும்

அகங்காரமும், வன்மமும் தேவையா ?
அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என
கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி.

அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி
வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல்,
பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம்
வாழ்க்கை வட்டத்தை கீறி கிழித்தபடி..

http://puthu.thinnai.com/?p=5883

நீவிய பாதை

பிறர் நிர்ப்பந்தித்த பாதையில்
பலவீனமாய் பாதம் பதிக்கையில்
முளைத்தது முதல் கோணல்.

அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட நேர்கோடும்
தொடர்கின்றன மலை பாதை வளைவுகளாக…
முற்றும் கோணலாகும் துற்சம்பவம்
தடுக்க பட்டது, அக அகழ்வாராய்ச்சியினால்..

பயங்கள் மக்கியிருந்தது பலவீனங்களாக.
ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த படுத்த
நீவி நேராகிறது புதிய பாதைகள்..

http://puthu.thinnai.com/?p=5678