Sunday, July 31, 2011

காண்டிப தேடல்

வஞ்சிக்க பட்டவரும்
வஞ்சித்தவரும்
வேடிக்கை மட்டும் பார்த்தவரும்
நெருங்கியவர்களே !

சமபந்தி உணவு இவர்களோடு
மற்றொமொரு நெருங்கியவரின்  திருமணத்தில்.

ரௌத்திரத்தை இலைக்கடியில் ஒளித்துவிட்டு
இலையில் பறிமாற பட்ட “சுமூக உறவு”
இலைக்கு இலை எச்சிலாக்க பட்டு
கைமாறியது அடுத்த ,அதற்கடுத்த இலையென..

போலி நாகரிகத்தை கிழித்தெரிய
சந்தர்ப்பமில்லா துவண்ட என்னிடம்
“காண்டிபத்தை” தேடி எடுக்க சொல்ல
தேவை எனக்குமொரு பரமாத்மா.

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=2854

Tuesday, July 26, 2011

ஆணுலகம்

அடித்து கொண்டும்
நெரித்து கொண்டும்
அடித்தவனும் சிரித்து
வாங்குபவனும் சிரித்து
பள்ளி வளாகமோ
அலுவல் வளாகமோ
தோழமையிலும் வலிமை ..

முகமில்லாத காலத்திற்கு
முகவரியே கொடுக்காத
ஆணுலகம் அழகு

மறப்பதா


பாலிலிருந்து
தயிராகி
வெண்ணையாகி
நெய்யான பிறகு....

நெய்யிலிருந்து
வெண்ணையாகி
தயிராகி
பாலாக சொல்கிறாய்....

Saturday, July 23, 2011

சித்தி – புத்தி

முச்சந்தி கோபுரத்தின் முகப்பில்
சித்தியும் புத்தியும்,பிள்ளையாரின்
தோள்களில் சாய்ந்திருப்பது போல்,
ஆறுதலான தோள்கள் எங்கே ?

காலங்கள் மாறியது
காட்சிகள் மாறியது
தோள்கள் தென்படாமலேயே ..
துவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது -
பிள்ளையாராக மாறிவிட்டால் என்ன ?

தன்நிறைவான இருப்பில்,
சித்தியென்ன புத்தியென்ன
எவருக்கெனும் ஆறுதலாக இருக்க முடிகிற
பிள்ளையாராகி விட்டால் தேடுதல் நிற்குமே!

பிள்ளையாராக இருக்கவே
பிறக்கிறார்கள் சிலர்
புரிகிற கணத்தில்
பிறக்கிறது வாழ்க்கை

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=2498

தோப்பின் தொப்புள்கொடி

பாசக்கார பயபுள்ள
நெட்டுக்க வளர்ந்தாலும்
வேரை மண்ணின் தொப்புள்கொடியென
பிடித்து மரமாக நிற்கிறாய்

உன் ஒருக்கிளையின்
அடி தாங்குவார்களா
இருந்தாலும் வெட்டுவார்கள் வீழ்கிறாய்,
கொடிசுற்றிய சிசுவாய் ..
பிளந்து போகிறாள் மண் ..

மண்ணில் ஊர்ந்தது
வானில் பறந்தது
உயிர்தப்பிக்க பரிணாம வளர்ச்சி கொண்டு ...

நாகரிக வளர்ச்சி விரும்பாத ஆதிவாசியாக,
பரிணாம வளர்ச்சிவிரும்பாது
அசையா சொத்தானாய்
புலம் பெயர்க்கிறார்கள்
விலை பேசுகிறார்கள்

இவ்வளவுக்கும் இன்றும்
பசுமையாகவே சிரிக்கிறாய்
புத்தனுக்கும் போதனை
உன் சிரிப்பின் மடியில்..

நன்றி : 'பதிவுகள்' கவிதைகள் ஜூலை 2011
http://pathivugal.com/

அழகா ? அவஸ்தையா ?

பதினென் வயதில்
பார்த்து பார்த்து ரசித்த
கண்ணாடியில் தெரிந்த சுயபிம்பம்
அழகா ? அவஸ்தையா ?
கண்ணாடி முன்
நீ நின்று ,நின்று
நான் நின்றாலும் நீயே தெரிகிறாய் - என
அண்ணன் சீண்டியது நினைவில்..
இப்பிம்பம்  அழகா ? அவஸ்தையா ?
.
பொங்கி விழும் அருவி ..
அருகில் பார்க்க ஆவல்  ,
அண்ணனும் நண்பர்களும்
மலையடிவாரத்திற்கு போக ,
நீ போக கூடாதென்று
குரலொன்று தடுக்க ,எழுந்த கேள்வி
இப்பிம்பம்  அழகா ? அவஸ்தையா ?
.
மலர்கொத்து என்றாலும்
கையில் பிடித்தபடியே,
எங்கு சென்றாலும்,
எந்த நேரத்திலும்
கீழே வைக்ககூடாதென
காப்பாற்ற படும்  பெண்மை
அழகா ? அவஸ்தையா ?

நன்றி :  'பதிவுகள்' கவிதைகள் ஜூலை 2011
 http://pathivugal.com/

எதிர் வரும் நிறம்

ஓவிய பலகையில்
பளீரென்று வரவேற்ற ஊதா,
புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட
பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக …

முன்வாசலில் நிலைப்பாட்டை நிறுத்த
சிவப்பை போல ஆக்ரோஷமாக
இருந்திருக்க வேண்டுமோ ?
வெள்ளை போல வெள்ளெந்தியாய்
இருந்திருக்க வேண்டுமோ ?
நீலம் போல ஆழமாய்
இருந்திருக்க வேண்டுமோ ?
எல்லாமும் கொஞ்சமாக கலந்து
இருந்தது தவறோ ? என்றும்

ஓவியன் கையிலெடுக்கும் நிறம்
எந்நிறமாக இருக்க கூடுமோ என
ஏக்கம் கொண்ட ஊதா,
அனுமானங்களை எதனுடன் வகுத்தாலும்
விகிதங்களே மிஞ்சுவதை கண்டு,

எதிர் வரும் கணத்தின் மேல்
எதிர்பார்க்கும் நிறத்தை திணிக்காமல்
யதார்த்தமாய் இருக்க பழகியது .

நன்றி : திண்ணை

பயணங்கள்

சொகுசு கார் ஒன்றின்
பின்புறத்தில் ஒட்டியிருந்த வாசகம் -
“வறுமையிலும் நேர்மை”.

போக்குவரத்து சைகை விளக்கில் பச்சை
மீண்டும் முரண்பாடுகளுடன் நகர்கிறது யாவும்.

"உயர் செல்வத்திலும் நேர்மை”
"கந்தலையே கசக்கி கொண்டு இராதே”
"கற்கள் கணவனாக வேண்டியதில்லை” - என்றோ
எதிர்மறை பதிவுகளில்லை தெரிந்த வரையிலும்.

ஜீவநதிகளும் கிழக்கு நோக்கியே இத்தேசத்தில்.
எதிர்மறை நர்மதைகளும் எங்கோ ஒன்று.

எதிர்மறைகள் முரண்கள் என
முரண்கள் அரண்கள் என உள்ள
தளத்தில் இயங்கும் நிர்பந்தத்தில்

முரண்பாடுகள் மூக்கில் ஏறி
ஏதோரு திரைப்பட நாயகனை போல
“எல்லாமே அசிங்கம், அசிங்கம்” என
சுற்றிச் சுற்றி வந்து மூர்ச்சை அடையாமலிருக்க

கைவசம் எப்போதிருக்கும் சகிப்பை
அவ்வப்போது கைகுட்டையில் தெளித்து
மூக்கை மூடியபடி தொடர்கின்றன பயணங்கள்

நன்றி : கீற்று

மூன்றாமவர்

புத்தி செய்திகள் படிக்கிறது
மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி..
எனது வரவேற்பு அறையில்.

நான் இருவரையும் பார்த்தபடி,
தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல

கண்கள் மூடினால் ஓய்கிறார்கள்
திறந்தால் மறுபடியும் கூச்சல்
ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !!

தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் -
இருவரையும் கவனிக்கும் என்னையும்
பார்த்து கொண்டிருப்பவரை கண்டு விட்டால்,
விருந்தே நடத்தி கொள்ளலாமென.

வாயிற் கதவு திறந்துதானிருக்கிறது
எப்போதெனும் வரகூடும் மூன்றாமவர்.

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=2067

காலம் – பொன்

பொன்னை துரத்தும் பந்தயம்
காலம்-நான்-பொன்
ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி .

ஓடினால் அள்ள முடியாதென
குதிரை மேல் சவாரி .
ஏறியதும் தெரிந்தது – இது
பொன் இடும் குதிரை மட்டுமல்ல
பொன் தேடும் குதிரையும் கூட .

தலை தெரிக்க ஓடுகிறது
அது பாய்கிற பாய்ச்சலில்
கழுத்திலிருந்த பிடி நழுவி
சவாரி வாலை பிடித்தபடி
அது போகிற இடமெல்லாம் …

கழுத்தில், குதிரை சலங்கைகளுடன் !
மன்னிக்கவும் -
மென்பொருள் தொழிலக அடையாள அட்டையுடன்.


நன்றி : திண்ணை

புள்ளி கோலங்கள்

என்னை சுற்றி
அடுக்கு அடுக்காய்
வரிசை கிரமத்தில்
புள்ளிகள்.

கோலம் துவங்கும் நேரத்தில்
புள்ளிகள் நகர்கின்றன..
மத்திய புள்ளியாகிய நானும்
அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு
கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி
கோல பலகையிலிருந்து
விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து
மீண்டும் நேர்வாட்டில்
குறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என
நகர்ந்து கொண்டே இருக்கிறேன் ..

நகர்கிற புள்ளிகளில்
கோலமாவது ,ஒண்ணாவது?
அசந்து விட்ட நேரத்தில்
புரிந்தது -

புள்ளிகள் நகர்கையில்
மாறி மாறி
உருவம் எடுக்கும்
வடிவங்களே
அழகான  கோலங்கள் என்று.

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=1465

நெருப்பின் நிழல்

ஒற்றை மெழுகுவர்த்தி
பிரகாசமான சுடர்.

காற்றின் அசைவுக்கு
சுற்றி சுழன்று
அணைகிற போக்கில்
சப்பனமிட்டு -பின்
நிலைபடுத்தி
நெடுநெடுவென்று அலைஅலையாய்…
வாழ் சூட்சம  நெளிவுகள் .

சூட்சமங்களின் அவசியமற்று
மெழுகுவர்த்தியின் காலை சுற்றி
வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய்
மோன நிலையில் அசைவற்று -
படுவேகமாய்,படுவேகமாய்,
உருமாறி திளைப்பில் துள்ளுகிறது
நெருப்பின் நிழல்.

அணைந்த நெருப்பு,
தன் மரணத்திற்கு
ஒப்பாரி வைக்கிறது
கருகிய வாசனையுடன்
மெலிந்த புகையுடன்.

மறைந்த நிழல்,
மரணத்தை பதிக்காத
இசைவான தன் மறைவில்
கவிதை புனைந்தது
இசையான தன் இருப்பை

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=1300

சித்தி

தாயாகி பெற்றெடுக்கும் முன்பே
தாய்மையின் ருசி பிறந்தது
அக்காவின் குழந்தை பிறந்ததிலிருந்து..

நன்றி : கூடல்
http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1616&c=2&title=aunty&author=k-chitra

தாத்தாவின் நாட்குறிப்பு

எட்டி எட்டி பார்த்துவிட்டு
ஓடி விடுகிறார்கள் குழந்தைகள் எனில்
மருமகள் வரவேற்பறையில் இருக்க கூடும் ..

சுற்றில் வரும்
பெரிய மருத்துவரைப் போல வந்து
"சரி, வேறன்ன ..?" என
ஆரம்பிக்கும் பிள்ளையிடம் -
       இரண்டு நாளாய் எதிர்வீட்டில்
       புதிதாக குழந்தையொன்று கையசைக்கிறது - என்றோ
       பல்லில் செருகிய ஏதோ
       சாயங்கால வாக்கில் வந்ததும்
       தான் தூங்க முடிந்தது   -   என்றோ
       இலவசம் தருகிறார்கள் என்றாலும்
       "நான் என்ன நினைக்கிறேன், என்றால் ....” - என்றோ
        ஏதாவது சொல்ல முடியுமா ?

சில்லறையாகத் தெரிந்தது -
இறந்து போன உன் உறவினர்கள்
கனவில் வந்ததாக நீ சொன்னபோது ...
இப்போது..
என் கனவில் நீ வருகிறாய்.
நானும் யாரிடமும் சொல்லுவதில்லை

நன்றி : கீற்று

ஓரு பார்வையில்

கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும்
வரைய தோணுவதை போல ..
கறைகளற்ற அடுப்பறையை கண்டதும்
சமைக்க தோணுவதை போல ..
பறக்க தோன்றவில்லை,
களங்கமற்ற வானத்தை கண்டதும் !

ஏனோ தெரியவில்லை!!
அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் ..
சிலிர்க்க வைக்கும்
மத்தாப்பு பூக்கள்
தெரித்தது உடலெங்கும்..

தெரித்தது தளும்ப தொடங்க ..
மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று  கீழிறங்கி
குழந்தையை கட்டி முத்தமிட்டு
நிலை பற்றாமல் சுற்றினேன் அங்குமிங்கும்..
ஏனோ தெரியவில்லை!!

ஜன்னல் வழியே - மீண்டும்
வானத்தை , கண்கள் விரிய கண்டு
என்னையறியாமல் சிரிக்க தொடங்கியிருந்ததும்..
தளும்பியது -  திண்டு திரசலில்லாமல்
விரவ தொடங்கியிருந்தது
விரிந்த அந்நீலவானம் போல...

நன்றி : திண்ணை

நியாயங்களும் தர்மங்களும்

மண்டையில் அடி வாங்கியவன்,
இரத்தம் சொட்டுவதை கண்டு
நியாயம் கேட்க ..

அவர்கள் சொல்கிறார்கள் :
“அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா உனக்கு ?”
இவர்கள் சொல்கிறார்கள் :
“அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா உனக்கு ?”

கண்ணுக்கெட்டிய வரலாற்றை கொண்டு -
நிகழ்வுகளின் சங்கலி கோர்வையில் ,
அநியாயம் எந்த இணைப்பிலிருந்து - என
அறியாது ....
பலவீனமாய் நகர்கிறது நகர வாழ்க்கை

காலுக்கு இழுத்தால் முகம் குளிர்கிறது
முகத்திற்கு இழுத்தால் கால் குளிர்கிறது என
பல சமயங்களில் ..
பத்தியும் பத்தாமலும் இழுபடுகிறது
நியாயங்களும் தர்மங்களும்

நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14868:2011-05-29-06-25-48&catid=2:poems&Itemid=265

திரிந்து போன தருணங்கள்

மலர் கண்காட்சியில்
சிவப்பு நிறத்தில் சின்னதாய்
வெள்ளை நிறத்தில் வெகுளியாய்
மஞ்சள்  நிறத்தில் மகிழ்வாய் …
அத்தனையும் அழகு !!

எதை பார்ப்ப்து
எதை விடுவதென்ற
தவிப்பை தவிர்க்க தெரியாமல்
லயிக்க நேரமும் இல்லாமல் …

கால்பாத வளைகுழியில்
பிடிக்க நினைத்தும்
கடல் அலை இழுக்க …
உருளை உருளையாக
நகரும் மணல் துகல்கள்
வியப்பான கிச்சுகிச்சு …
 
பிடிக்க நினைத்த தருணங்கள்
உருளையாக கிச்சுகிச்சு மூட்டாமல்
விசுக் விசுக்கென்று மறைந்து ,
ஆழ்ந்த அனுபவங்களாய்  மாறாமல் -

திரிந்து போன தருணங்களாய் …
லயிக்க நேரமில்லாததால்
லயிக்க பழகாததால்

நன்றி : திண்ணை

உள் வெக்கை

தெரிந்த வகையில்
மண்வீடு கட்டி விளையாடினர்கள்
பலத்த காற்று வீச
கலைந்த மண்வீட்டை கண்டு
ஒருகணம் முழித்தாள்
மறுகணம் சிரித்தாள்
மறுபடியும் மண்வீடு கட்டி
சுற்றிசுற்றி விளையாடி சிரித்தார்கள்
மண்வீட்டை மிதித்தும் சிரித்தார்கள் !


குளிர்காற்று ஈரத்தில் சளி பிடிக்குமென
வேகமாக வீட்டிற்குள் இழுத்து சென்றதும்
படபடக்கும் திரைசீலையை பிடித்தவாறே
குழந்தை சொன்னாள் -
’அம்மா, வேர்க்குது ...’


நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14763&Itemid=139

விரத பேதம்

கண்ணுக்கெட்டிய
கைக்கெட்டிய தூரத்தில்
உணவு இருந்தும்
உண்ணாமல் இருந்தால் - விரதம்

 அது புண்ணியம்
அதுவே போராட்டம்.

கண்ணுக்கெட்டியவரை
கைக்கு கிட்டிய தூரத்தில்
உணவை காட்டாமல் இருந்தால் !! - பட்டினி

அது விதி
போராடி முன்னேற ஆலோசனை.
செய்தித்தாளில் வர வேண்டுமெனில்
இறப்பு - குறைந்தபட்ச தகுதி
பட்டினியில் தள்ள பட்டவனுக்கு..

வயிறு காய்வதிலும்
இருக்க பட்டவனென்றும்
இல்லாத பட்டவனென்றும் உண்டோ ??
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ...

நன்றி : பதிவுகள் கவிதைகள்
http://pathivugal.com/

தெரியாது

தெரியாது ..
உண்மையிலேயே தெரியாது .. 

வினை விதைத்தவன் வினை அறுப்பான் , தெரியுமா ?
வினை விதைக்காதவன் வினை அறுப்பதாலும்,
விதைத்தவன் அறுக்காமலேயே சேர்ந்து விட்டதாலும் -
தெரியாது ... 

அலுவலகத்தில் அடுத்த ராஜினாமா ,யார் ?
இராணுவ ரகசியம் ஒன்று - முன்பே
தெரியுமென்ற பிரமையை ஏற்படுத்தலாம் என்றபோதும் -
தெரியாது ...

கடவுளென்று தனிநபர் இருக்கிறாரா ?
பிரார்த்திக்கும் போது பாதுகாப்பும்,
நிம்மதியும் உணர்ந்த போதிலும் -
தெரியாது ... 

தெரிந்திருப்பதாக நினைத்து ஏற்படும் ச்ங்கடங்கள் ... ?
‘தெரியாது’ என சொல்ல முடிவதால்
உண்மையிலேயே தெரியாது ... 

நன்றி : பதிவுகள் கவிதைகள்

தொடுவானம்

ரோட்டோர பிளாட்பாரத்தில்
ஒரு தொழுநோயாளனும்
ஒரு தொழுநோயாளியும்

அவர்களைத் தாண்டி
கால்கள் போகிற போது
கைகளை நீட்டி
பிச்சை கேட்கிற நேரம் தவிர
சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்..

பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில்
தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ ?
நோய் சந்தித்த பின்பா ? முன்பா ? பின் எனில்
உன்னிடமிருந்து தொற்றியதென்ற குற்றபதிவு கண்களிலில்லை
முன்பே எனில் ஒருவருக்கொருவர் ஆறுதலோ ?


ஆறுதலோ ஆர்வமோ
அகநானூறு படலங்களை தீர்மானிப்பது
புற நானூறாயிரம் நியாயங்கள்
இந்நியாயங்களின் காவல் அருகிலில்லை
இம்மனிதர்களுக்கும் காவல் அருகிலில்லை

சடசடவென்ற பாதசாரிகளின் நடைகளுக்கிடையில்
சில்லறை சத்தம் மட்டும் அவ்வப்போது
மற்ற சமயங்களில் யாவும்
’தொடர்பு கொள்ளும் நிலையிலில்லை’ – என
சமூகம் பதிவுசெய்த ஒரேகுரல்.


பிளாட்பாரத்தின் விளிம்பு
தொடுவான கோடாய்
வெவ்வேறு உலகத்தை பார்த்தபடி நீளமாய்….


நன்றி : திண்ணை.
http://puthu.thinnai.com/?p=145 

மழை

இயற்கை
பசுமை நெய்ய
நீர் இழை பிரிக்கிறது...!
 
நன்றி : கூடல்.

கடவுள்

மறுக்க முடிந்தவர்களுக்கு நாத்திகம்
உணர முடிந்தவர்களுக்கு ஆத்திகம்
இடை பட்டவர்களுக்கு சௌகரியம்!
 
நன்றி : கூடல்

Friday, July 22, 2011

பிதுக்கப்பட்டவர்கள்

தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில்
தொண்டுகிழவர் கைத்தடியும் தடித்த கண்ணாடியுமாய்
தாண்டி போகிற யாவரிடமும் யாசிக்க...

     நொடி பொழுதும் திரும்பி பார்க்காத
     சடசடவென்று பரபரக்கும் மனிதர்களுக்கிடையே -
     கையில் கட்டட பொருட்களோடு ஓடிய
     தொழிலாளி குடும்பம் ஒன்று நின்று
     துளாவி காசு கொடுத்து  ஓடியது ..

உலகமயமாக்கலின் பொருளாதார சிக்கலில்
பிதுக்கப்பட்ட, விளிம்பிலிருந்த பற்பசையாக
ரோட்டோரத்தில் கையேந்தி இன்று இக்கிழவர்
நாளை அவர்களாகக் கூடுமென்ற கரிசனமோ?

     விளிம்பை தாண்டி தள்ளப்பட தள்ளப்பட
     உள்ளிருந்த அனைத்துக்கும் தன்முறை வரும் - என
     உணராத கூட்டம் கைபேசியுடன் வேகவேகமாக...

நன்றி : கீற்றில் வெளிவந்தது.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14606:2011-05-14-08-01-32&catid=2:poems&Itemid=265

அப்படியாகிலும் இப்படியாகிலும்

தூக்க சொல்லி
கால் சுற்றி வந்து
புடவை கொசுவத்தில்
முகம் புதைக்கிற வேளைகளில்..

தூக்குகிற அம்மாவாயிருந்தால்
தோளில் சாய்ந்து
விரல் சப்பலாம்..

தூக்காத நேரங்களில் !!!
தூக்காத நேரங்களிலும்
அழாமல் இருக்க
கவிதை எழுதி
பழகி கொள்கிறேன்..

கை கோர்த்து நடக்கையிலும்
கைகள் வீசி நடக்கையிலும்
அப்படியாகிலும் இப்படியாகிலும் -

விளையாட்டு மட்டும்
கோர்த்த கைகளுடனோ
கையிலுள்ள பொம்மையுடனோ
நிறுத்தமில்லாமல் ...

நன்றி :  பழைய திண்ணையில் வெளிவந்தது
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=311050818&format=html

கால தேவா

கால தேவா ...
துரோகியை எதிர்க்கிற வேளையில்
நீமறைந்து எய்திய இராமபானம்
மார்பில பாய்கிற வரை
உன் இருப்பு புரியவில்லை.

பானையில் வைத்தவிட்டு வந்து
பார்க்கலாம் என்று திரும்பியபோது
வெற்றிடமான பானையை கண்டு - நீ
வந்துபோனது உணர்ந்து அதிர்ந்தேன்.

கால்சுவடு கைசுவடு இல்லையெனினும்
உன் கையொப்பம் - நான்
உருவாக்குகிற அனைத்திலும்

உன்னை கணிக்க முடியாததால்
உன்னை கடக்க சொல்கிறார்கள் - நீ

இராமபானம் எய்தினாலும்,
பூமழை பொழிந்தாலும்
அலட்சியமாய் இருந்தால் கடப்பதாகுமாம்

கணிக்கவோ,கடக்கவோ
முயன்று கொண்டேயிருந்தால்
என் காலம் முடிந்துவிடும் - நீயிருப்பாய்
ஜகஜால கில்லாடியாய்!

நன்றி :  பழைய திண்ணையில் வெளிவந்தது.
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=311041715&format=html

புத்தமாவது

ஆரம்பபள்ளி  வளாகமாய் மனபெட்டகம் ..
மூக்கை நோண்டியபடி புரிதலின்றி
தானாக லயித்து      சிரித்தபடி
அடைபட்டோம் என்று கூவியபடி
அனேக உணர்வுகள் சிலகணம்

மணியடித்து பள்ளி முடிந்து
ஓவென்று   விரிச்சோடி போன
கண்ணுக் கெட்டியவரை வெற்றிடமாய்
உணர்வுகள் அற்று சிலகணம்

உணர்வுகளாய்  கணப்பிணும்       பாராமகிறாய்
உணர்வுகளற்று வெற்றிடமானாலும் பாராமகிறாய்

பூவிரிய கண்டு புன்னகைத்ததை
தீட்சையாக சுவைத்து பகிர்ந்த
புத்தமாவது எப்போது ...

நன்றி : பழைய திண்ணையில் வெளிவந்தது.
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=310121214&format=html